“அவிநாசி லிங்கேஸ்வரருக்கு அடுத்து அவிநாசி தொகுதியை அதிகம் ஆள்வது அதிமுக தான்” என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் நிரம்பிய இந்தத் தொகுதியில் 2006 தொடங்கி கடந்த நான்கு தேர்தல்களாக தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது அதிமுக.
தனித் தொகுதியான அவிநாசியில் இரண்டாவது முறையாக எம்எல்ஏ-வாக இருக்கிறார் ப.தனபால். 2016-ல் முதல் முறையாக இங்கு வென்ற இவரை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து அழகுபார்த்தார் ஜெயலலிதா. அப்போது, “என் போன்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மதிப்புமிக்க பேரவைத் தலைவர் பதவியில் அமரவைத்தவர் ஜெயலலிதா” என நெகிழ்ந்தார் தனபால்.
கடந்த முறை பேரவைத் தலைவராக இருந்ததால் சொந்தத் தொகுதிக்குள் அதிகம் தலைக்காட்டாமல் சென்னைவாசியாகவே இருந்தார் தனபால். இதனால், ‘சபாநாயகரைக் காணவில்லை’ என்றெல்லாம் எதிராளிகள் போஸ்டர் ஒட்டி கிண்டலடித்தார்கள். ஆனபோதும் அவர் மீதான அன்பைக் குறைத்துக் கொள்ளாத அவிநாசி மக்கள், 2021 தேர்தலில் முந்தைய தேர்தலைவிட சுமார் 23 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக தந்து தனபாலை மீண்டும் ஜெயிக்கவைத்தார்கள். அது தவறோ என அந்த மக்கள் நினைக்குமளவுக்கு தனபாலின் செயல்பாடுகள் இப்போது அங்கு விமர்சிக்கப்படுகின்றன.
“முன்பு தான் சபாநாயகரா இருந்தார். இப்ப அவர் எம்எல்ஏ தானே… தொகுதியைக் கவனிக்காம என்ன செய்கிறார்?” என்று அவிநாசியில் சாமானியர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். “அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நடத்திய போராட்டத்தின் போது தென்பட்ட தனபாலை அதற்குப் பிறகு இந்தப் பக்கம் பார்ப்பதே அரிதாகிவிட்டது” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.
புதுப்பாளையம் மற்றும் கோதபாளையம் குளங்களில் உள்ள மான்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல ஆளில்லை. சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அவிநாசி. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இங்குள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லை.
இதைக் கேட்க ஆளில்லை. அதேபோல், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டை விவகாரம், உள்ளாட்சி அமைப்புகள் விரிவாக்கம் என அரசுக்கு எதிராகப் போராடி மக்களின் அபிமானத்தைப் பெற அவிநாசிக்குள் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லை.
மக்களவைத் தேர்தலில் தனது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனை நீலகிரி தொகுதியில் நிறுத்தினார் தனபால். இப்போது, வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலைவிட்டு ஒதுங்கிக் கொண்டு மகனையே அவிநாசி தொகுதியில் நிறுத்தலாமா என ஆழம் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியொரு நிலை வந்தால் லோகேஷின் வெற்றி அத்தனை சுலபமில்லை என்கிறார்கள்.
தனபாலுக்கு சொந்த ஊர் சங்ககிரி. அவிநாசியை கவனிக்கமுடியாமல் போனதற்கு அவர் வெளியூர்க்காரராக இருப்பதும் ஒரு காரணம். “கட்சி பணிகளுக்காக அடிக்கடி சென்னை செல்ல வேண்டியிருப்பதால் ஐயா தனபாலால் தொகுதிப் பக்கம் அடிக்கடி வரமுடியாமல் போகிறது.
என்றாலும், நடக்க வேண்டிய வேலைகள் நடந்துட்டுத்தான் இருக்கு” என்று அதிமுகவினர் சப்பைக்கட்டுக் கட்டினாலும், தொகுதி எம்எல்ஏ-வை, நினைத்தவுடன் பார்த்து தங்களது குறைகளைச் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் மக்களுக்கு இருக்கிறது. இதுகுறித்து கருத்தறிவதற்காக நாம் தனபாலை அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோம். ஆனால், அதை எடுத்துப் பேசவும் அவருக்கு நேரமில்லை!














