அந்நிய சக்திகளுடன் சேர்ந்து நாட்டை பலவீனப்படுத்த முயற்சி: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

0
96

சில அரசியல் தலைவர்கள் அந்நிய சக்திகளோடு கைகோத்து நாட்டை பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்து மதத்தையும் மகா கும்பமேளா உள்ளிட்ட இந்து பண்டிகைகளையும் விமர்சிக்கின்றனர். சமுதாயத்தில் பிரிவினையை தூண்ட முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் அமைந்துள்ளது. இந்த கோயில் அறக்கட்டளை சார்பில் கர்ஹாவில் ரூ.218 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பளவில் புற்றுநோய் மருத்துவமனை கட்டப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

சில அரசியல் தலைவர்கள் இந்து மதத்தை விமர்சித்து வருகின்றனர். மகா கும்பமேளா உள்ளிட்ட இந்து மத பண்டிகைகள் குறித்தும் இந்து பாரம்பரியங்கள் குறித்தும் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் இன்னமும் அடிமைத்தன மனநிலையில் இருந்து விடுபடவில்லை.

அந்த அரசியல் தலைவர்கள், அந்நிய சக்திகளோடு கைகோத்து நாட்டை பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றனர். சமுதாயத்தில் பிரிவினையை தூண்டி, ஒற்றுமையை சீர்குலைக்க தீவிர முயற்சி செய்கின்றனர். அவர்களின் சதியை, மக்கள் முறியடிக்க வேண்டும்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த விழா நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது. நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் மகா கும்பமேளா குறித்து மக்கள் பேசுகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். பிரயாக்ராஜில் பக்தி மட்டுமன்றி சமூக சேவையும் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக கண் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. சுமார் 1.5 லட்சம் பேருக்கு இலவசமாக மருந்துகள், கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு உள்ளன. 16,000 பேருக்கு இலவசமாக கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

இந்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை மக்களுக்கு சேவையாற்றும் புனிதத் தலங்களாக விளங்குகின்ற. நமது சாதுக்கள் ஆயுர்வேதம், யோகாவை உலகத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். ஏழைகளின் துன்பம் எனக்கு தெரியும். நாடு முழுவதும் ஏழை குடும்பங்களின் நலனுக்காக ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டை திட்டத்தை அமல்படுத்தினேன். நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வெளிசந்தையில் ரூ.100-க்கு விற்கப்படும் மருந்து, மக்கள் மருந்தகத்தில் ரூ.15-க்கு கிடைக்கிறது.

நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் 1,500 டயாலசிஸ் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புற்றுநோய் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. புற்றுநோயை தடுக்க புகையிலை பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு மாட்டத்திலும் புற்றுநோய் சேவை மையங்கள் திறக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here