குஜராத் மாநிலம், துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
3 பெண்கள் உள்ளிட்ட 5 உறுப்பினர்களை கொண்ட இக்குழு நீரில் மூழ்கிய நமது கலாச்சார பெருமையை அறிய இந்த ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நீருக்கடியில் உள்ள வளமான பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக ஏஎஸ்ஐ நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
குஜராத்தில் துவாரகா மற்றும் பெட் துவாரகா கடற்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக யுஏடபிள்யு (Underwater Archaeology Wing) என்ற சிறப்புக்குழு சமீபத்தில் மீண்டும் உருவாக்கப்பட்டது.
தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் அலோக் திரிபாதி தலைமையிலான இக்குழுவில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் முறையாக இக்குழுவில் கணிசமான எண்ணிக்கையில் பெண் ஆய்வாளர்கள் உள்ளனர். இக்குழு முதல்கட்ட ஆய்வுக்காக கோமதி முகத்துவாரம் அருகிலுள்ள ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து ஆய்வுப் பணி மேற்கொண்டுள்ளது.
நீருக்கடியில் தொல்பொருள் ஆய்வு செய்வதில் 1980-களில் இருந்து ஏஎஸ்ஐ-யின் யுஏடபிள்யு முன்னணியில் உள்ளது. இந்தப் பிரிவு கடந்த 2001 முதல் பங்காரம் தீவு (லட்சத்தீவு), மகாபலிபுரம் (தமிழ்நாடு), துவாரகா (குஜராத்), லோக்தக் ஏரி (மணிப்பூர்), எலிஃபண்டா தீவு (மகாராஷ்டிரா) போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














