சம்பல் பகுதியில் கலவரம் ஏற் படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சதி செய்துள்ளனர் என்று சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்துள்ள 4,400 பக்க குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஷாஹி ஜமா மசூதி, கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், மசூதியில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். இரண்டாவது கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த சென்ற போது பெரும் கலவரம் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந் தனர். இந்நிலையில், கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி அர்ச்சனா சிங்கிடம் 4,400 பக்க குற்றப்பத்திரிகையை, போலீஸ் அதிகாரி குல்தீப் குமார் மற்றும் மாவட்ட அரசு வழக்கழிஞர் ஹரி ஓம் பிரகாஷ் ஆகியோர் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தனர். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 79 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.
இதுகுறித்து சம்பல் போலீஸ் எஸ்.பி. கிருஷ்ண குமார் பிஸ்னோய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சம்பல் பகுதியில் கலவரம் நடைபெற்ற இடத்தில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறி முதல் செய்யப்பட்டன. அவை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள
ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சம்பல் பகுதியை சேர்ந்த ஷாரிக், கார்களை திருடும் தாதா கும்பலை சேர்ந்தவர்.
டெல்லி – என்சிஆர் பகுதியில் மட்டும் இவர் 300-க்கும் மேற்பட்ட கார் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளார். தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடனும் அவருக்கு தொடர்பு உள்ளது. ஒரு கட்டத்தில் போலி பாஸ்போர்ட் மூலம்ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பியோடியுள்ளார். அங்கிருந்து சம்பல் கலவ ரத்துக்கு சதி திட்டம் தீட்டியதற் கான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். ஷாரிக் கும்பலை சேர்ந்தவர்கள்தான் சம்பல் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாவுர்ரகுமான் பார்க், உள்ளூர் எம்எல்ஏஇக்பால் மொகமூதின் மகன் சுஹைல் இக்பால் ஆகியோருடன் ஷாரிக்குக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால், அவர்களுடைய பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு போலீஸ் எஸ்.பி. கிருஷ்ண குமார் பிஸ்னோய் கூறினார்.
 
            

