சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகாரை தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் அப்துல் காதர். தொழிலதிபரான இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இந்த வழக்கு அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் அந்த ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்துல் காதர், பல்வேறு நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு கீழ்ப்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள அப்துல் காதர் வீடு மற்றும் மண்ணடியில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, முழு விவரங்கள் தெரியவரும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.














