இயக்குநர் சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மீண்டும் ரி-ரீலிஸ் ஆகிறது.
சேரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோஃகிராப்’. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி மறுவெளியீடு செய்ய படக்குழு தயாராகி வருகிறது. மே மாதம் சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருக்கிறது.
2004-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி வெளியான படம் ‘ஆட்டோஃகிராப்’. 150 நாட்களை கடந்து 75 திரையரங்குகளில் ஓடியது. காதலர்களால் கொண்டாடப்பட்ட இப்படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார் சேரன். இதில் சிநேகா, கோபிகா, கனிகா, மல்லிகா, இளவரசு உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்திருந்தனர்.
பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது. மேலும், தேசிய விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றது. அதுமட்டுமன்றி கன்னடம், தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தில் வீடியோ ஒன்றிணை உருவாக்கி வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோ பதிவு இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.