பெண் நோயாளிகள் மருத்துவரால் பரிசோதிக்கப்படும் வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தது தொர்பாக குஜராத் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குஜராத் மருத்துவமனை ஒன்றில் மூடிய அறைக்குள் பெண் நோயாளிகளை மருத்துவர் பரிசோதிப்பது தொடர்பான வீடியோ ஊடகத்தில் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அகமதாபாத் காவல் துணை ஆணையர் (சைபர் கிரைம்) ஹர்திக் மகாடிடா நேற்று கூறியதாவது: சமூக ஊடங்களை நாங்கள் வழக்கமான கண்காணிப்பு மேற்கொண்டபோது இந்த வீடியோக்கள் எங்கள் கவனத்துக்கு வந்தன.
யூடியூப் சேனல் ஒன்றில் இது தொடர்பாக 7 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் கீழே டெலிகிராம் குழுவுக்கான லிங்க் தரப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற வீடியோக்களை காண கட்டணம் செலுத்துமாறு அதில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளோம். அந்த நபர் அல்லது நபர்கள் தொடர்பான விவரத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அவ்விரு தளங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.
இது சிசிடிவி பதிவு போல் தோன்றுகிறது. எந்த மருத்துவமனையில் இது பதிவு செய்யப்பட்டது எனத் தெரியவில்லை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.