உத்தரபிரதேச மாநிலத்தில் முன்பை விட குற்றங்கள் குறைந்திருப்பதாக வாராணசியின் போலீஸ் ஐஜி பதவியில் இருக்கும் தமிழரான கே.எழிலரசன் கூறியுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த இவர் தோட்டக்கலை துறையில் முனைவர் பட்டம் பெற்று வாராணசியின் மாநகரக் காவல்துறையின் இணை ஆணையராகப் பணியாற்றுபவர், ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழர்களை முக்கியப் பணிகளில் அமர்த்தியிருப்பதாக் கூறப்படுவது உண்மையா?
இது உண்மைதான். வாராணசி, காசி மற்றும் பனாரஸ் என அழைக்கப்படும் இந்த மாநகர நிர்வாகத்தில் தமிழர்களுக்கும் வாய்ப்பளித்து உள்ளனர். இதற்கு எங்கள் பணித்திறமையில் அவர் அதிக நம்பிக்கை வைத்திருப்பது காரணம். இதை காக்கும் வகையில் உ.பி.யின் அதிகாரிகளில் தமிழர்களுக்கு அதிக நேர்மையானவர்கள் என்ற பெயர் உ.பி. வாசிகளிடம் உண்டு.
வாராணசி நகரில் நீங்கள் குற்றவழக்குகளின் நடவடிக்கைகள் தொடர்பாக அணுகும் புதிய நடவடிக்கைகள் பற்றி கூற முடியுமா?
நான் வாராணசியில் ஒன்றரை வருடங்களுக்கு முன் பணியமர்ந்தேன். அதன் பின்னர் இணையதளம் மூலம் அனைத்து காவல்நிலையங்களையும் இணைத்து வைத்துள்ளேன். இதில், காவல்நிலைய நடவடிக்கைகளை நான் நேரடியாகக் கண்காணிக்கிறேன். புகார்களை காவல்நிலையத்தில் விசாரிக்கும் முறையை எனது மேஜை முன்பாக உள்ள டி.வி. ஸ்கீரினில் பார்த்து விடுவேன். இதில், புகார்தர வரும் நபர்களின் தேவையை பொறுத்து எனது ஜுனியர் அதிகாரிகளான ஏசிபி, டிசிபி போன்றவர்களையும் இதன் வாயிலாகவே அழைத்து கேள்வி எழுப்புவதும் நடக்கிறது. மற்றொன்று புகார் தருபவர்களுக்கு அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் முறையாகக் கிடைப்பதில்லை எனப் பொதுவான புகார் உள்ளது. இதை மறுக்கும் வகையில், அவர்களுக்கு எப்ஐஆர், குற்றப்பதிவேட்டின் நகல் என அனைத்தும் அளித்து அவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் எடுக்கிறேன். இந்த உத்தரவுகளை மீறும் காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இணையதளம் மூலம் கண்காணிக்கும் இந்த முறையால் பலன் என்ன?
காவல்நிலையத்தின் விசாரணையில் குறைகள் இருப்பின் நேரடியாக அதில் நான் தலையிடும் வாய்ப்பும் உள்ளது. இதை கவனத்தில் கொண்டு காவல்நிலைய அதிகாரிகளும் மிகவும் பொறுப்புடன் விசாரிக்கத் துவங்கி விட்டனர். இதன் பலனால் சம்பந்தப்பட்டவர்களை எனது அலுவலகம் அழைத்து விசாரிக்கும் நேரமும் மீதமாகிறது. நான் இருந்த இடத்திலிருந்தே தேவையான உத்தரவுகளையும் பிறப்பிக்கிறேன். இதுபோல், ஓர் உயர் அதிகாரியின் முன்னிலையில் வெளிப்படையான விசாரணை என்பதால் புகார்தரும் பொதுமக்கள் காவல்நிலையம் வரத் தயங்குவதில்லை. எனது நிர்வாகப் பகுதிவாசிகளுக்கு ஒரு நம்பிக்கை வளர்ந்து விட்டது. இதுபோன்ற பலனால், உ.பி.யின் வேறு அதிகாரிகளும் இம்முறையைப் பயன்படுத்த விரும்பி என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர்.
துறவிகளும், வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர் அதிகம் வரும் புனித நகரமாக இது உள்ளது. இதனால், அவர்களை அணுகும் முறையில் உங்கள் காவல்துறையினருக்கு எதுவும் புதிய உத்தரவுகள் உண்டா?
ஆம். இவர்களிடம் காவல்துறையினர் தன் மிடுக்கை விட அதிகமாக அன்புடனும், மரியாதையுடனும் அணுக உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் வருகையினால்தான் இந்நகரின் பொருளாதார வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. இதன் காரணமாகவும் அவர்களது அணுகுமுறையில் அதிக கவனம் மேற்கொள்ளப்படுகிறது.
மகா கும்பமேளாவினால் வாராணசியிலும் பெருகும் பக்தர்கள் கூட்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?
இந்தியா முழுவதிலும் காவல்துறையினருக்கு நெரிசல்களை கட்டுப்படுத்த ஒரு பொதுவான முறை உள்ளது. ஆனால், இதை தலைமை ஏற்று நடத்துபவரை பொறுத்து அதன் பலன் மாறுபடுகிறது. இதுபோன்ற எந்த மாற்றங்களும் இல்லாத வகையில் நாம் பணியாற்றி கூட்டத்தை சமாளித்து வருகிறோம். குறிப்பாக, விஐபிக்களானாலும் குறிப்பிட்ட சாலைகளில் அவர்கள் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எந்தவிதமானத் தலையீடுகளையும் தடுக்கும் முழுஅதிகாரம் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகள், புகார்கள் வரும் இடங்களில் 10 நிமிடங்களில் ரோந்து போலீஸார் சென்று சேரும் சூழல் வாராணசியில் அதிகம் உள்ளது. இதுபோல், சில உத்திகளால் தற்போது பிரச்சினைகள் இல்லை.
உ.பி.யில் குற்றங்கள் அதிகம் என்பது போல் செய்திகள் அதிகமாக வருவதன் காரணம் என்ன?
நான் தமிழகத்திலும் அயல்பணியில் பணியாற்றி அச்செய்திகளைப் படித்துள்ளேன். இதுபோன்ற செய்திகளின் கண்ணோட்டத்தில் உண்மை இல்லை. மேலும், தமிழகத்தை விட மூன்று மடங்குகளுக்கும் அதிகமான பகுதியுடன் 75 மாவட்டங்கள் உ.பி.யில் அமைந்துள்ளன. 25-க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உ.பி. உள்ளது. இதை நாம் கணக்கில் வைத்து பார்த்து வேண்டும். உ.பி.யின் முந்தைய நிலையை பார்க்கும்போது தற்போது குற்றங்கள் பல மடங்கு குறைந்துள்ளது. மாஃபியா, கிரிமினல் என குற்றம் செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதுபோன்ற குற்றங்களை உ.பி. முதல்வரின் தனிப்பிரிவு நேரடியாகத் தலையிட்டு கவனிக்கிறது. வீடுகள் அமைந்துள்ள சில இடங்களில் குற்றங்களை தடுப்பது சிரமம். இருப்பினும், இதன் மீது எடுக்கும் நடவடிக்கைகள் முக்கியமாக அமைகின்றன.