காலவரையற்ற வேலை நிறுத்தமா? – கேரள தயாரிப்பாளர்கள் மோதல்

0
139

நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வலியுறுத்தி, ஜூன் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கேரள திரைப்படத் துறையினரின் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய கேரள தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் குமார் “ வரிகுறைப்பு தொடர்பாகப் பலமுறை வலியுறுத்தியும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்களின் சம்பளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும்போது, 10 சதவிகிதம் கூட தியேட்டரில் வசூல் ஆவதில்லை. இதற்கு ஒரு முடிவை எட்ட ஜூன் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம்” என்று கூறினார்.

இதற்கு மலையாள சினிமா வில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மோகன்லால் நடிக்கும் படங்களை பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் அந்தோணி பெரும்பாவூர் கூறும்போது, “இந்தவேலைநிறுத்தம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எதற்கும் வேலைநிறுத்தம் சரியான முடிவாக இருக்காது. தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, இந்த முடிவை எடுக்க சுரேஷ்குமாருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள் என்பது தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார். இவரைப் போல நடிகர் விநாயகன் உட்பட வேறு சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ்குமார், “வேலைநிறுத்த முடிவு நான் எடுத்ததல்ல, அது மற்ற திரைத்துறை சங்கங்களுடன் இணைந்து நடத்திய கூட்டுக்கூட்டத்தில் எடுத்த முடிவு. இந்தத் துறையில் 46 வருடங்களாக இருக்கிறேன். ஆண்டனி பெரும்பாவூர், சினிமா பார்க்கத் தொடங்கியபோது, ​​நான் அவற்றைத் தயாரித்துக் கொண்டிருந்தவன். சங்கத்தின் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாத அவருக்கு அங்கு நடப்பது எப்படித் தெரியும்?” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here