அதானி விவகாரத்தில் இந்தியாவில் மவுனம் காப்பதும், வெளிநாடுகளில் அது தனிப்பட்ட பிரச்சினை என நழுவிக் கொள்வதும் பிரதமர் நரேந்திர மோடியின் வாடிக்கையாக உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடியிடம் அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் ட்ரம்ப்புன் விவாதிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தனிப்பட்ட பிரச்சினைகளை இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். இது அவரது வழக்கமான பதிலாகவே உள்ளது.
அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினால் அமைதியாக இருப்பதும், வெளிநாட்டில் கேள்வி எழுப்பினால் அது தனிப்பட்ட பிரச்சினை என்று கூறி தப்பித்துக் கொள்வதும் பிரதமர் மோடியின் தந்திரமாக உள்ளது. அமெரிக்காவிலும் அதானியை காப்பாற்றும் வேலையைத்தான் பிரதமர் மோடி செய்து வருகிறார்.
தேசத்தை கட்டமைக்கிறோம் என்ற பெயரில் மோடிஜி அவருடைய நண்பர் அதானியின் பாக்கெட்டை நிரப்பி வருகிறார். லஞ்சம் மற்றும் தேசத்தின் சொத்துகளை கொள்ளையடிப்பதை பிரதமர் வசதியாக தனிப்பட்ட விஷயமாக மாற்றி வருகிறார். இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் சோலார் மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெற 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டேர் மீது கடந்த நவம்பரில் அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.














