உடல்நலக் குறைவால் காலமான எஸ்.ஐ குடும்பத்துக்கு சக போலீஸார் ரூ.15 லட்சம் நிதி திரட்டினர். அதை சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று எஸ்.ஐ குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபு என்பவர், பணியில் இருந்தபோது உடல்நலக் குறைவால் கடந்தாண்டு செப்.11-ம் தேதி காலமானார்.
இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி மற்றும் சாய்சந்தீப்(23), ஶ்ரீராகவ்(19), சாய்சவரேஷ்(14) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். உதவி ஆய்வாளரின் திடீர் மறைவால் அவரது குடும்பம் தடுமாறியது.
இதையடுத்து, அவரது குழந்தைகள் படிப்புக்கும், குடும்ப வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையில் தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் இவருடன் பணியில் சேர்ந்த 1997 பேட்ச் காவலர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழு மூலம் மொத்தம் ரூ.14 லட்சம் நிதி வசூலித்தனர்.
மேலும் சென்னை காவல்துறை சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இந்த ரூ.15 லட்சம் நிதியை கோபுவின் குடும்பத்தாரிடம் சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று ஒப்படைத்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூடுதல் ஆணையர் (மத்திய குற்றப் பிரிவு) ராதிகா, துணை ஆணையர்கள் அதிவீரபாண்டியன் (நிர்வாகம்), மெகலீனா ஐடன், (நலன் மற்றும் எஸ்டேட்) மற்றும் 1997 பேட்ச் போலீஸார் உடனிருந்தனர்.














