“சினிமாவில் நடிகர்கள் பற்றாக்குறை” – எஸ்.ஜே.சூர்யா

0
196

நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது: ஜாலியா வாங்க, ஜாலியா போங்க என்பது போல இந்தப் படம் இருக்கும். சினிமாவில் நடிகர்கள் பற்றாக்குறை இருக்கிறது. புதிய நடிகர்கள் தேவை. அதற்கு நடிகர் தனுஷ், ஒரு பட்டாளத்தை உருவாக்கி அனுப்பி இருக்கிறார். இது அருமையான கதைக்களம். ஒரு காலத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சாரும் அனந்து சாரும் சேர்ந்து பண்ணியிருக்கிற விஷயத்தை தனுஷ் அசால்ட்டாக செய்திருக்கிறார். பெரிய பெரிய தத்துவங்களை எளிமையாக சொல்லியிருக்கிறார். இன்றைய இளையோரின் மனநிலையை, சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார்.

‘ராயன்’ மாதிரி ஒரு படத்தைப் இயக்கி விட்டு, அடுத்து இப்படியொரு கதை பண்ணுவது ஆச்சரியம்தான். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தனுஷ், சர்வதேச படம் பண்ணுகிறார். இந்தியில் நடிக்கிறார். தானே இயக்கி நடிக்கிறார். மற்ற நடிகர்களை நடிக்க வைத்து இயக்குகிறார், தயாரிக்கிறார்… அனைத்தையும் எளிதாகச் செய்கிறார். அது வியப்பாக இருக்கிறது. இதில் நடித்திருக்கிற பவிஷ், நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சரியான இயக்குநர்கள் படங்களில் நடித்தால் சினிமாவில் அவருக்கு சிறந்த இடம் இருக்கிறது. இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here