ஆந்திராவில் பெண்களுக்கான ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டம்: முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

0
130

ஆந்திராவில் பெண்களின் நலனுக்காக, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆந்திராவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டத்தை தொடங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் முதலில் வெள்ளோட்டமாகவும், பிறகு மாநிலம் முழுவதுமாகவும் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டத்துக்காக அரசு தரப்பில் ஒர்க் ஷாப் (பணி நிலையம்) கட்டப்பட உள்ளது. இங்குள்ள கணினிகள் மூலம் ஆண், பெண் இருபாலரும் பணி செய்துவிட்டு வீடு திரும்பலாம். சில நிறுவனங்களிடம் இதற்கான பேச்சுவார்த்தையிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டத்தை பெண்களுக்காக விரைவில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் தங்களது குடும்பம் மற்றும் வேலையை ‘பேலன்ஸ்’ செய்து சிறப்பாக பணியாற்ற முடியும். இத்திட்டம் பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு திட்டமாக அமையும் என நம்புகிறேன். கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றினார்கள். அப்போது தான் கூட்டுப் பணியிடங்கள், (சிடபிள்யுஎஸ்), அருகாமை பணியிடங்கள் (என்டபிள்யுஎஸ்) போன்றவை ஏற்பட்டன. இவை மூலம் அவரவரும் தங்களின் நிறுவனத்துக்கு நல்ல வளர்ச்சியை கொடுத்தனர். இதைத்தான் நாங்கள் மீண்டும் பெண்களுக்காக செய்யப் போகிறோம். ஒவ்வொரு மாவட்டம், மாநகரம், நகரம் மற்றும் மண்டலங்களில் தங்களின் பணி அலுவலகங்களை நிறுவ, நிறுவனங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இதற்கு அரசு முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here