குமரியில் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்வது வழக்கம். இதற்குப் பல்வேறு விதிமுறைகளை போலீசார் வைத்துள்ளனர். போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி இவற்றைக் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் விதி மீறல்கள் பல பகுதிகளில் நடந்து விபத்துக்களும் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. அரசின் உத்தரவுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மதிப்பதில்லை. ஒரு பயணிகள் ஆட்டோவில் சுமார் 15 முதல் 20 குழந்தைகள் வரை ஏற்றிக் கொண்டு செல்லும் அவலம் நடக்கிறது. நேரம் கருதி பெற்றோர்களும் விபரீதம் தெரியாமல் பள்ளிக்குப் பிள்ளைகளை இதுபோல் ஆட்டோவில் அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கொல்லங்கோடு, நித்திரவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனவர் கிராமங்களில் தினமும் பயணிகள் ஆட்டோவில் அதிகமான மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் காண்பிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே இதுபோன்ற ஆட்டோக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.














