மகாகும்பமேளாவில் மகி பவுர்ணமி தினத்தையொட்டி 73.60 லட்சம் பக்தர்கள் நேற்று புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. நாடெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தரள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மகி பவுர்ணமி தினமாகும். மகத்தான இந்நாளில் நீராடுவதற்காக நேற்று அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று மட்டும் 73.60 லட்சம் பக்தர்கள் நீராடியதாகத் தெரியவந்துள்ளது. திரிவேணி சங்கமம் மற்றும் பல்வேறு படித்துறைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
இதில் 10 லட்சம் கல்பவாசிகளும் அடங்குவர். குறிப்பிட்ட நாட்கள் நதிக்கரையோரம் தங்கியிருந்து பூஜை செய்பவர்களை கல்பவாசிகள் என்று அழைக்கின்றனர். இந்நிலையில் மகி பவுர்ணமி தினத்தில் நீராடிய பின்னர் கல்பவாசிகள் பிரயாக்ராஜிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
விழா ஏற்பாடுகளை போலீஸ் டிஜிபி பிரசாந்த் குமார், அரசு உள்துறை முதன்மை செயலர் சஞ்சய் பிரசாத் உள்ளிட்டோர் கண்காணிப்பு அறையிலிருந்து கண்காணித்தனர்.
            













