மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் ஃபல்நார் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியில் ஈடுபடும் சி-60 கமாண்டோ படையினர் கட்சிரோலி பகுதியில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு மாவோயிஸ்ட் முகாம் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மகேஸ் நகுல்வர் என்ற காவலர் குண்டு காயம் அடைந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, கட்சிரோலி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘‘ மாவோயிஸ்ட் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த காவலர் மகேஸ் நகுல்வரை காப்பாற்ற தீவிர முயற்சிகள் எடுத்தும், அவர் வீர மரணம் அடைந்து விட்டார். மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் நகுல்வரின் தியாகம் வீண் போகாது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். மகேஸ் நகுல்வரின் குடும்பத்துக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்படும். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு இதர பலன்களும், ஆதரவும் அளிக்கப்படும். ’’ என்றார்.














