தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் ஆலோசனை

0
269

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை மற்றும் இதர துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஆங்காங்கே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில், சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் புகார், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அரசியல் ரீதியாக விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயராம், பல்வேறு துறை அரசு செயலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் தலைமைச்செயலர் வழங்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர் புகாருக்கு எண்: இதற்கிடையே, பள்ளிகளில் மாணவர்கள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களுக்குள்ளான ஆசிரியர்களின் பட்டியல்களை சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் பணிநீக்கம், கல்விச் சான்று ரத்து உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் தைரியத்துடன் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், ‘‘மாணவர்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? பாதுகாப்பற்ற சூழலில் உள்ளீர்களா? தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவையா? உடனே 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு அழையுங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்து பள்ளிகளிலும் தீவிரமாக விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here