தர்ஷன், காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘கனா’ மற்றும் ‘தும்பா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ளார் தர்ஷன். இவர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். இப்படத்துக்கு ‘ஹவுஸ் மேட்ஸ்’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபேன்டஸி ஹாரர் காமெடி பாணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.
இதில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட பலர் தர்ஷனுடன் நடித்துள்ளார்கள். இதனை புதுமுக இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தினை விஜய பிரகாஷ் மற்றும் சக்திவேல் இணைந்து தயாரித்துள்ளார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ், இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஓர் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் படக்குழு உருவாக்கி இருக்கிறது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.








