இருபது ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகன பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிஎஸ்-2 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிப்பவை என வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 2 சக்கர மற்றும் கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் முறையே ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.
இதுபோல 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நடுத்தர வர்த்தக வாகனம் மற்றும் கனரக வாகன பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் முறையே ரூ.12 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதே வாகனங்கள் 20 ஆண்டுகள் பழமையானதாக இருந்தால் புதுப்பிப்பு கட்டணம் முறையே ரூ.24 ஆயிரம் மற்றும் ரூ.36 ஆயிரமாக உயர்த்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேநேரம், டெல்லிவாசிகளுக்கு பாதிப்பு இல்லை. ஏனெனில், டெல்லியில் 10 ஆண்டுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையும் கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














