நடிப்பு பயிற்சி அளித்த தனுஷ்!

0
210

நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது.

படம்பற்றி நடிகர் பவிஷ் நாராயண் கூறியதாவது: நான் தனுஷ் சாரிடம் 4 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அது எனக்குப் பெரிய அனுபவத்தைக் கொடுத்தது. அவரது ‘ராயன்’ படத்தில் பணியாற்றியபோதுதான், இந்த வாய்ப்பை கொடுத்தார். உதவி இயக்குநராக பணியாற்றியதன் மூலம் சினிமாவில் அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும். அப்படி நடிப்பையும் கற்றுக் கொண்டேன்.

இன்றைய தலைமுறை இளைஞர்களைப் பற்றிய காதல் கதை இது. நானும் அனிகா சுரேந்திரனும் காதலர்களாக நடித்திருக்கிறோம். நட்பு, காதல், மோதல், ஜாலி என படம் அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக இருக்கும். ரொமான்ஸ் காட்சியில் நடிக்கக் கஷ்டப்பட்டேன். தனுஷ் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். அவரிடம் இருந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க கற்றுக் கொண்டேன். சிலரை தவிர அனைவரும் புதுமுகம் என்பதால் படம் தொடங்குவதற்கு முன்பு எங்களுக்கு 2 வாரங்கள் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. படப்பிடிப்பில் அது அதிகம் உதவியது. இவ்வாறு பவிஷ் நாராயண் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here