டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் ஆதிஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. கடந்த 27 ஆண்டுக்குப் பின்னர் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் தொடர்ந்து 3-வது தேர்தலிலும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை ராஜ்நிவாஸில் நேற்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஆதிஷி வழங்கினார்.
டெல்லியில் மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். எனினும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல், சிறையில் இருந்தே ஆட்சி நிர்வாகத்தை கவனித்தார்.
பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆதிஷியை முதல்வராக்கினார். இதன் மூலம் டெல்லியில் பாஜக.வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸின் ஷீலா தீக்சித் ஆகியோருக்கு அடுத்து 3-வது பெண் முதல்வராக ஆம் ஆத்மியின் ஆதிஷி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், இந்தத் தேர்தலில் 22 இடங்களை மட்டுமே அக்கட்சியால் பிடிக்க முடிந்தது. எனினும், டெல்லியின் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆதிஷி வெற்றி பெற்றார். கேஜ்ரிவால் உட்பட முக்கியத் தலைவர்கள் தோல்வியடைந்தனர்.














