கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு: மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா

0
156

மணிப்பூரில் இன கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்தியஅரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள பழங்குடியின மாணவர்களும், குகி பழங்குடியினத்தவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளனர். 1,108 பேர் காயம் அடைந்தனர். 60 ஆயிரம் பேர் தாங்கள் வசித்தபகுதிகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். 2 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு ஆளும் பாஜக அரசால் தீர்வு காண முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் பிரேன் சிங்கை மாற்றவேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் சூழல் எழுந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், கொறடா உத்தரவை மீறி பிரேன் சிங் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் வாக்களித்தால் மணிப்பூரில் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுவதை கட்சி மேலிடம் விரும்பவில்லை. இதையடுத்து, மேலிட அழைப்பின்பேரில் டெல்லிசென்ற பிரேன் சிங், அங்கு பாஜகதலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பிரேன் சிங் முடிவு செய்தார். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை நீக்கும் வகையில், அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் நேற்று வழங்கினார். கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here