அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வருகிறார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

0
151

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அத்திக்கடவு-அவிநாசி 2-வது திட்டம் நிறைவேற்றப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றக் காரணமாக இருந்ததாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பினர் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பழனிசாமி பேசியதாவது:

60 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிறவிப் பயனை அடைந்துவிட்டேன். பணத்தாலோ, புகழாலோ என்னை யாராலும் அடிமைப்படுத்த முடியாது. 2018-ல் ரூ.1,652 கோடியில் அரசாணை வெளியிட்டு, மாநில அரசு நிதியில் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டேன்.

அதிமுக ஆட்சியில் 85 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள 15 சதவீத பணியை ஓராண்டில் செய்திருக்கலாம். ஆனால், அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் திமுக கிடப்பில் போட்டு, காலதாமதமாக தொடங்கி வைத்துள்ளனர். அத்திக்கடவு-அவிநாசி 2-வது திட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்போது, 2-வது திட்டம் நிறைவேற்றப்படும்.

இதேபோல, ஆனைமலையாறு – நல்லாறு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டங்களும் அதிமுக ஆட்சிக்கு வரும்போது நிறைவேற்றப்படும். நடந்தாய் வாழி காவிரி திட்டம், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பழனிசாமி மாட்டு வண்டியில் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார். விவசாயிகள் சார்பில் தானியங்கள், கீரை, காய்கறி, பழங்கள் ஆகியவை சீர் வரிசையாக வழங்கப்பட்டன. மேலும், பசு மாடு, கன்று, மாட்டு வண்டி ஆகியவையும் வழங்கப்பட்டன. விழாவில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்எல்ஏ-க்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பிஆர்ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் நடராஜன், கணேஷ், சம்பத், பெரியசாமி, ரவிகுமார் மற்றும் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here