பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் இளையகண்ணு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு பள்ளியிலும் திருச்சி மணப்பாறையில் தனியார் பள்ளியிலும், திண்டிவனம் அரசு கல்லூரியிலும் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இத்தகைய கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும் என்ற ஏக்கமும், தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை எப்போது ஏற்படும் என்ற எதிர்பார்ப்பைும் தமிழக மக்களின் மனங்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கின்றன. இந்த கேள்விகள் அனைத்துக்கும் தமிழக அரசுதான் விடையளிக்க வேண்டும். மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை, விரைவாக பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதன் மூலமாகவும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.














