களியக்காவிளையிலிருந்து குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை வழியாக நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக படுமோசமாக காணப்பட்டது. இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க ரூ 14 கோடி 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் குழித்துறை பகுதியில் தார் போட்டு சீரமைக்கும் பணி இரண்டாம் நாளாக இன்று தொடர்ந்தது.
நெடுஞ்சாலைத்துறை குழித்துறை இன்ஜினியர் சரசு உள்ளிட்டோர் முன்னிலையில் பணிகளை விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் ஆய்வு செய்தார். சீரமைப்பு பணி நடப்பதை முன்னிட்டு நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் குழித்துறை சந்திப்பில் இருந்து அதங்கோடு, படந்தாலுமூடு வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் சில வாகனங்கள் குழித்துரை தபால் நிலையம் சந்திப்பு, கழுவந்திட்டை, மருதங்கோடு வழியாக களியக்காவிளைக்கு திருப்பி விடப்பட்டன. ஆனால் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் சென்றன.














