வில்லுக்குறி பேரூராட்சியின் அலுவலக பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குளம் ஒன்றுள்ளது. இந்த குளத்தின் அருகேயுள்ள தோப்பில் கடந்த மூன்றாம் தேதி மாலை செப்டிக் டேங்க் கழிவு லாரி ஒன்று வந்து நின்றது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த வாகனத்தை பிடித்தபோது அவர்கள் மனித கழிவுகளை தோப்பில் கொட்டிக் கொண்டிருந்தனர். இதை வீடியோவாக பதிவு செய்து அவர்கள் அதை வில்லுக்குறி செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதன் பிறகு லாரியை கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். செயல் அலுவலர் 2000 ரூபாய் அபராதம் விதித்து லாரியை விடுவித்தார். குமரியில் இறைச்சி கழிவுகள் கொண்டு வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அதிகம் வாழும் பகுதியில், விவசாய நிலத்தில் மனிதக் கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ 2 ஆயிரம் அபராதம் மட்டுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.














