அருமனை அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்தின் (35). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார்.
நேற்று (பிப்ரவரி 05) அருமனையில் உள்ள தனியார் பாரில் சுனில் மற்றும் அகஸ்தின் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயம் பாரில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் ஆத்திரத்தில் இருந்த அகஸ்தின் நேற்று (பிப்ரவரி 05) இரவு அரிவாளுடன் சுனில் வீட்டுக்குச் சென்றார். அங்கு சுனில் தாயார் மட்டும் இருந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டின் ஜன்னலை அடைத்து உடைத்து, தாயாரை மிரட்டிவிட்டுச் சென்றார். இதனை அறிந்த சுனில் அகஸ்தின் வீட்டிற்குச் சென்று ஜன்னலை உடைத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து சுனிலின் தாய் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் அரிவாளுடன் வந்து மிரட்டியதாக அகஸ்தினை போலீசார் கைது செய்தனர். மேலும் அகஸ்தின் வீட்டைத் தாக்கிவிட்டு தலைமறைவான சுனிலைத் தேடிவருகின்றனர்.














