சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள 240 ஆண்டுகள் பழமையான பொது அஞ்சலகத்துக்கு நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. சுற்றுலா, ஆன்மிகம், வரலாறு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு ‘நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை’ வெளியிடப்படுகிறது.
சென்னையில் மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், அண்ணா சாலை அஞ்சல் தலை பணியகம், சென்னை பல்கலைக்கழக அஞ்சல் அலுவலகம் உட்பட தமிழகத்தில் இதுவரை 51 தபால் நிலையங்களுக்கு நிரந்தர அஞ்சல் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாரிமுனையில் நேற்று நடந்த விழாவில், ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் உள்ள பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரையை சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்டார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘தபால் பெட்டி எழுதிய கடிதம்’ என்ற நூலையும் வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது: இந்தியாவில் கொல்கத்தா, மும்பையை தொடர்ந்து சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் 240 ஆண்டுகளுக்கு முன்பு பொது அஞ்சலகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1884-ல் பாரிமுனையில் உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு, 140 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து 2 முறை தீக்கிரையான இக்கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு சேவைகள் தபால்கள் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன. மாதத்துக்கு 5 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள், வாகன பதிவு சான்றிதழ்கள் தபால் மூலம் வழங்கப்படுகின்றன. ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் சான்றிதழை 1 லட்சம் பயனாளிகளிடம் சென்னை நகர மண்டல தபால்காரர்கள் கொண்டு சேர்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘‘இந்தியாவின் எல்லா குடும்பங்களையும் இணைப்பது தபால் துறை. பழைய வாழ்த்து அட்டைகளுக்கு கிடைத்த சந்தோஷம் இன்றைய குறுஞ்செய்தியில் கிடைப்பது இல்லை. இக்காலகட்ட தகவல் பரிமாற்றங்கள் ஒரு நாள், ஒரு வாரத்தில் மறைந்து விடுவதால் ஒரு தலைமுறையின் அடையாளமே அழிந்து வருகின்றன” என்றார்.
சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் எம்.மனோஜ், உதவி இயக்குநர் ஜி.பாபு, சென்னை பொது அஞ்சலகத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரி சுவாதி மதுரிமா, தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜெ.ரோலாண்ட்ஸ் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














