திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் உள்ள மலைப்பகுதியில் ஏற்கனவே இருதரப்பு மோதல் காரணமாக அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் திருப்பரங்குன்றத்திற்கு சென்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் நேற்று (பிப்ரவரி 3) இரவோடு இரவாக இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் தக்கலை பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி சேர்ந்த 10 நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், வேல் குமார் மற்றும் மாவட்ட துணை தலைவர் உள்ளிட்டோரை போலீசார் நேற்று இரவு கைது செய்து தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இன்று (பிப்ரவரி 4) மாலை அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து மற்றும் 10 பேரை வீட்டுக்காவலில் வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














