சென்னை மண்டலத்துக்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம்: 13 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள்

0
160

பின்தங்கிய, கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் சேவையை எளிதாக வழங்கும் நோக்கில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தொலைதூரம் மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகள் எளிதாக கிடைக்கும் வகையில், நடமாடும் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமாரிடம் இதற்கான வாகனம் வழங்கப்பட்டது.

மாணவர்களிடம் விழிப்புணர்வு: இதன்மூலம் ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு, பாஸ்போர்ட் விண்ணப்ப நடைமுறைகள் செயல்படுத்தப்படும். இதனால், அரசின் சேவைகள் பொதுமக்களின் வீட்டுக்கே கொண்டு வந்து நிறைவேற்றப்படுகின்றன. பாஸ்போர்ட் சேவைகள், நடைமுறைகள் குறித்தும், ஓர் அடையாள ஆவணமாக பாஸ்போர்ட்டை வைத்திருப்பதன் அவசியம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

கோவை, சேலம் மற்றும் அவற்றை ஒட்டிய கிராமப்புற பகுதிகள் மற்றும் ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வேன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 2-வதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here