போலீஸாரின் துரித நடவடிக்கையால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட கர்நாடக மருத்துவர் விடுவிப்பு

0
327

கர்நாடகாவில் போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர் விடுவிக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த மருத்துவர் சுனில் குப்தா (45). இவர் நேற்று முன் தினம் காலையில் சூரியநாராயணபுராவில் நடைபயிற்சி மேற்கொண்ட போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தியது. கடத்தல்காரர்கள் சுனில் குப்தாவின் சகோதரரும் பெல்லாரி மதுபான விற்பனையாளர் சங்கத்தின் தலைவருமான‌ வேணுகோபால் குப்தாவை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டனர்.

அப்போது, ”உங்களின் சகோதரரை விடுவிக்க வேண்டுமானால் மாலை 6 மணிக்குள் ரூ. 6 கோடி தர வேண்டும். அதில் பாதி தங்கமாகவும், மீதி ரொக்கமாகவும் தர வேண்டும்”என நிபந்தனை விதித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் குப்தா, உடனடியாக பெல்லாரி போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் மருத்துவர் சுனில் குப்தா கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அவர் காரில் கடத்தப்பட்டது உறுதியானதை தொடர்ந்து, மாவட்ட எல்லைகளை கண்காணிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டனர். குறிப்பாக கடத்தல்காரர்கள் வெளிமாநிலங்களுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டது.

இதையடுத்து கடத்தல்காரர்கள் எங்கும் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பெல்லாரி நகரின் ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடத்தில் மருத்துவர் சுனில் குப்தாவை தனிமையில் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் இரவு 8.30 மணியளவில் தப்பி ஓடினர். அப்போது சுனில் குப்தாவின் கையில் இருந்த ரூ.300-ஐ மட்டும் பறித்துக்கொண்டு, பேருந்தில் ஏறி சென்றனர்.

இதையடுத்து போலீஸார் மருத்துவர் சுனில் குப்தாவை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”இந்த கடத்தல் சம்பவத்தால் மருத்துவர் சுனில் குப்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். கடத்தல்காரர்கள் அவரை விடுவித்து இருந்தாலும், அவர்களை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழில் போட்டி, மதுபான வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கடத்தல் நடைபெற்றதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here