4 ஆண்டுகளாகியும் கரோனா நிவாரணம் கிடைக்கவில்லை! – ‘உதிரிப்பூக்களின்’ கண்ணீரை உதாசீனப்படுத்தலாமா?

0
153

இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் துயர் கரோனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகட்டுமேனிக்கு ஈவிரக்கமின்றி காவு வாங்கிச் சென்ற அந்த பெருந்தொற்று தந்துசென்ற வலியை இன்னமும் கூட பல குடும்பங்கள் அனுபவித்து வருகின்றன. பெருந்​தொற்றின் பேரழிவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் எந்தவிதத்​திலும் பாதித்து​விடக் கூடாது என்பதற்காக மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்​டங்களை அறிவித்தன.

தாயையும் தந்தையையும் கரோனா​வுக்கு பறிகொடுத்த பிள்ளை​களுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சமும், மாநில அரசு ரூ.5 லட்சமும் நிவாரணம் அறிவித்தன. தாய் அல்லது தந்தையை இழந்த பிள்ளை​களுக்கு ரூ.3 லட்சத்தை நிவாரணமாக அறிவித்த மாநில அரசு, கரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளை​களின் கல்லூரி வரையிலான படிப்புச் செலவு​களையும் ஏற்பதாக உத்தர​வாதம்தந்தது. ஆனால், இதெல்லாம் சொன்னபடி நடந்ததா என்றால் இல்லை என்கிறார்கள்.

பல்லடம் அருகே​யுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவர் கரோனாவின் ஆரம்ப அலையில் அதற்கு பலியானவர். இவரது மகள் தற்போது கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தந்தை இறந்த மறுவாரமே கரோனா நிவாரண உதவித் தொகைக்காக விண்ணப்​பித்​தார். ஆண்டுகள் நான்காகியும் இன்னமும் அதற்கு அரசு தரப்பிலிருந்து பதிலில்லை. பஞ்சலிங்​கத்தின் மனைவி தினமும் 12 மணி நேரம் உழைத்து தனது மகளை படிக்க வைத்து வருகிறார்.

இதேபோல் திருப்பூர் பிச்சம்​பாளை​யத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் கரோனா தொற்றுக்குப் பலியா​னார்கள். இவர்களது மகள் கெட்டிக்​காரத்​தனமாக பள்ளிப் படிப்பை முடித்து தற்போது சென்னை மருத்​துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்​கிறார். இவருக்கும் உயர் கல்விக்கான அரசின் உதவித் தொகை இதுவரை கைக்குக் கிடைக்க​வில்லை. உறவினர்கள், நண்பர்கள் உதவியால் மருத்​துவக் கல்வியை தடைபடாமல் தொடர்​கிறார் அந்த மாணவி.

இந்த இரண்டு பிள்ளை​களும் சாம்பிள் தான். இப்படி தமிழகமெங்கும் தகுதியான ஆயிரக் கணக்கான பிள்ளைகள் கரோனா நிவாரண உதவித் தொகை கிடைக்​காமல் சிரமத்​துக்கு நடுவே படிப்பை தொடர்​வ​தாகச் சொல்லப்​படு​கிறது. இதுகுறித்து பேசிய திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் சிலர், “மாவட்ட வாரியாக குழந்தை​களுக்கான கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்​பட்​டுள்ளன.

ஆனால், அனைத்துத் தகுதிகள் இருந்தும் மாவட்​டத்​துக்கு 150 முதல் 200 குழந்தைகள் வரை கரோனா நிவாரண உதவிகள் கிடைக்​காமல் காத்திருக்​கிறார்கள். இவர்களுக்கான நிதியை அரசு ஒதுக்​காமல் கிடப்பில் வைத்திருக்​கிறது. உரிய காலத்தில் நிவாரண உதவி கிடைக்​காததால் இந்தக் குழந்தைகள் எல்லாம் உறவினர்கள், நண்பர்​களிடம் கடன் பெற்று கல்வி பயின்று வருகிறார்கள்” என்றனர்.

இதுகுறித்து சுகாதா​ரத்துறை அமைச்சர் மா.சுப்​பிரமணி​யனிடம் கேட்டதற்கு, “ஏற்கெனவே தகுதியான அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்​பட்​டுள்ளது. யாருக்​காவது விடுதல் இருந்தால் அவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்றார். பெருந்​தொற்றில் பெற்றோரை இழந்த இந்தக் குழந்தைகள் ஏற்கெனவே மனதளவில் கடுமையாக பாதிக்​கப்​பட்​டிருக்​கிறார்கள்.

அவர்கள் மேலும் மன உளைச்​சலுக்கு ஆளாகி​வி​டாமல் பார்த்​துக்​கொள்ள வேண்டிய பொறுப்பு நிவாரணம் தருவதாக அறிவித்த தங்களுக்கு உள்ளது என்பதை புரிந்​து​கொண்டு மத்திய – மாநில அரசுகள், அவர்​களின் கண்​ணீரைக் ​காலத்தே துடைக்க வேண்டும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here