திருவட்டாறில் ரூ.2.55 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பஸ் நிலைய சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. இதில் வயலில் நாற்று நடும் படம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போன்ற படங்கள் வரையப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மேற்கு வாசல் ஓவியமாக வரையப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று ஓவியத்தை வரைந்து வந்த ஓவியர் திடீரென வெள்ளை பெயின்ட்டால் ஓவியத்தை அழிக்க தொடங்கினார். இதை பார்த்த ஆதிகேச பெருமாள் கோவில் பக்தர்கள் அங்கு வந்து ஓவியத்தை ஏன் அழிக்கிறீர்கள்? என்று கேட்டனர். அதிகாரிகள் அதிக்க கூறியதாக ஓவியர் கூறினார்.
இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பக்தர்கள் ஓவியத்தை அழிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அத்துடன் கோவில் ஓவியத்தை தொடர்ந்து வரைய வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஓவியர் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.














