ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி ஸ்ரீ ஜெயந்திரா எஸ்ஜிஜே அணிகள் மோதின. திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.
ஜோஷ் ஷேன் பிரான்சிஸ் 97, ராகவ் 75 ரன்கள் விளாசினர். 221 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்ரீ ஜெயந்திரா எஸ்ஜிஜே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக டிஎம் மிதுன் 59 ரன்கள் சேர்த்தார். 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆட்ட நாயகனாக ஜோஷ் ஷேன் பிரான்சிஸ் தேர்வானார். சிறந்த பேட்ஸ்மேனாக செயின்ட் பீட்ஸ் அணியின் ஷவின் (164 ரன்கள்), சிறந்த பந்து வீச்சாளராக ஸ்ரீ ஜெயேந்திரா எஸ்ஜிஜே அணியின் எம்.சரவண சங்கீத் ராஜன் (6 விக்கெட்கள்), தொடர் நாயகனாக செயின்ட் பீட்ஸ் அணியின் ராகவ் (278 ரன்கள்) தேர்வானார்கள்.
பரிசளிப்பு விழாவில் சிஎஸ்கே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சிஎஸ்கேவின் நிதித் தலைவர் எஸ்.ஸ்ரீராம், ஈக்விடாஸ் வங்கியின் பிராந்திய வணிக மேலாளர் ஹக்கிம் கான், திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் ஆர்.வரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.














