டெல்லிக்கு முன்னாள் பிரதமர் ஷீலா தீட்சித் மாடல் வளர்ச்சி தேவை, பிரதமர் மோடியின் பொய் பிரச்சாரமும், கேஜ்ரிவால் மாடலும் தேவையில்லை என முகநூலில் வீடியோ வெளியிட்டு ராகுல் பிரச்சாரம் செய்துள்ளார்.
டெல்லியில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டெல்லி சதார் பஜார் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவரால் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அதனால் தனது முகநூலில் அவர் வீடியோ தகவல் வெளியிட்டு வாக்களர்களிடம் ஓட்டு கேட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மோசமான கட்டுமானம், மாசு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவைதான் டெல்லியில் மக்கள் முன் இருக்கும் உண்மை நிலவரம். முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் உண்மையான வளர்ச்சி மாடல்தான் டெல்லிக்கு தற்போது தேவை. பிரதமர் மோடியின் பொய் பிரச்சாரமும், கேஜ்ரிவாலின் மாடலும் டெல்லிக்கு தேவையில்லை. இந்த இரு தலைவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் பலன் அடைய வேண்டும் என அவர்கள் விரும்பவில்லை.
டெல்லியில் மக்கள் தொகை அதிகரிப்பு, ஊழல் மற்றும் பணவீக்க பிரச்சினை நிலவுகிறது. ஆனாலும், மோடியின் பொய் பிரச்சார யுக்தியை கேஜ்ரிவாலும் பின்பற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்படும். ஷீலா தீட்சித் டெல்லியில் 3 முறை தொடர்ந்து முதல்வராக இருந்தபோது, செய்த பணிகள் பாராட்டுக்குரியவை. காங்கிரஸின் அந்த சாதனைகளை கேஜ்ரிவால் மற்றும் பாஜக.,வால் ஈடுசெய்ய முடியாது. இவ்வாறு ராகுல் கூறினார்.














