ரூ.1 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு விவசாயிக்கு தமிழக மின்வாரியம் நோட்டீஸ்

0
239

கொடைக்கானல் அருகே கே.சி.பட்டியில் விவசாயியிடம் மின் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்து மாறு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொடைக்கானல் கீழ்மலைக் கிராமமான கே.சி.பட்டியில் விவசாயமே பிரதான தொழிலாகும்.

இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு சிங்கிள் பேஸ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாவே இப்பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த அளவு மின்சாரம் பயன் படுத்தினாலும், மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி இளையராஜா என்பவருக்கு 8,976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 333 மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், நோட்டீசில் உள்ளபடி மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்வாரிய துறையினர் எச்சரித்துள்ளதால் அவர் கவலை அடைந்துள்ளார்.

இதுகுறித்து கே.சி.பட்டி கிராம மக்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக வீடுகளுக்கு பயன்படுத்தும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வருகிறது. இந்த குளறுபடிக்கு புதிய டிஜிட்டல் மின் மீட்டர் காரணமா? என தெரியவில்லை. மின் கட்டணம் குறித்து பல முறை புகார் அளித்தும் மின்வாரியத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது விவசாயி இளையராஜாவுக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது.

அவரைப்போல, பலருக்கும் ரூ.7 ஆயிரம், ரூ.8 ஆயிரம் மின் கட்டணம் செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here