நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள வடிவேல் என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், ‘‘கைதாகி யுள்ள வடிவேல் மீது பல ஆண்டுகளாக பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கெனவே பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த அவர் கடந்தாண்டுதான் கைதாகியுள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என ஆட் சேபம் தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணை பாதிக்கும்: அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோன்ற குற்ற வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்படும் பிடிவாரன்ட்களை ஏன் முறையாக அமல்படுத்துவதில்லை என்றும், இதேநிலை நீடித்தால் விசாரணை நீதிமன்றங்கள் எப்படி வழக்கு விசாரணையை துரிதமாக விசாரித்து முடிக்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.
ஒருங்கிணைப்பு இல்லை: மேலும், காவல் நிலையங் களுக்கிடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தாலேயே இவ்வாறு நிகழ்வதாக தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.














