பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும்போது போதுமான தகவல்களை தெரிவிக்காவிட்டால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் தங்கள் இணைப்பு அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னரே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.
இதை முறையாக பின்பற்றும் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் நடப்பாண்டு கல்லூரிகள் அங்கீகாரம் அனுமதி பெறுவதற்கான ஏஎம்எஸ் (affiliated monitoring system) என்ற இணையதளமானது கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 2025-26 ம் கல்வியாண்டில் பல்கலை.யின் இணைப்பு அங்கீகாரத்தை பெறுதல், நீட்டிப்புக்கான வழிமுறைகள் www.annauniv.edu/cai/index.php என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதை பின்பற்றி அங்கீகாரம் கோரும் கல்லூரிகள் ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். இந்த கால அவகாசத்தை தவறுபவர்கள் அபராதத் தொகையுடன் பிப்ரவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதையடுத்து ஆதார் எண்ணுடன் பயோமெட்ரிக் சாதனங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர்களின் செல்போன் எண், தொடர்பு முகவரிகள் சமர்ப்பிக்கப்பட்டதையும் உறுதிசெய்யவேண்டும். அவை ஆய்வின்போது சரிபார்க்கப்படும். ஆசிரியர் தகுதிகள், அனுபவம், ஊதிய அளவு மற்றும் பணியாளர் விகிதம் போன்ற விதிகள் பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும்.
இதுதவிர என்ஐஆர்எப் தரவரிசை எண் மற்றும் சான்றிதழ்கள், முந்தைய 3 ஆண்டுகளுக்கான வருடாந்திர செலவு விவரங்கள், மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றவேண்டும். அனைத்து தகவல்களையும் சமர்பித்த பிறகு, அதை நகலாக எடுத்து பராமரிக்க வேண்டும். பல்கலைக்கழகம் கேட்கும்போது எல்லாம் அதை கொடுக்கும் வகையில் தயாராக வைத்திருக்க வேண்டும். யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ விதிகளின்படி 6 அல்லது 7-வது சம்பளக்குழுவின் பரிந்துரையின்படி சம்பளம் கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களை சமர்ப்பிக்காத கல்லூரிகள் வரும் கல்வியாண்டுக்கான இணைப்பு அங்கீகாரத்துக்கு பரிசீலிக்கப்படாது. ஒவ்வொரு முதுநிலை பட்டப் படிப்புக்கும் பொருத்தமான துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற பேராசிரியர் அல்லது இணை பேராசிரியர் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் இணைப்பு அங்கீகாரம் நீட்டிக்கப்படாது.
இணைப்பு அங்கீகாரத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யாத படிப்புகள் எந்த அறிவிப்பும் இல்லாமல் இடைநிறுத்தப்படும் அல்லது ரத்து பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக தெரியவந்த நிலையில் விதிமுறைகளை கடுமையாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.














