இந்தியாவுக்கு எதிராக போர் என கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது பிஹார்வாசி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் கடந்த 15-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்” என்றார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள காவல் நிலையத்தில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் சவுத்ரி ரோசெரா சப்-டிவிஷன் சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “இந்தியாவுக்கு எதிராக போராடுகிறேன் என ராகுல் காந்தி தெரிவித்த கருத்தால் அதிர்ச்சி அடைந்த நான், என் கையில் இருந்த பால் பக்கெட்டை தவறி கீழே விட்டுவிட்டேன். அதில் இருந்த ரூ.250 மதிப்புள்ள 5 லிட்டர் பால் முழுவதும் கொட்டிவிட்டது. நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ள ராகுல் மீது பிஎன்எஸ் சட்டத்தின் தேசத்துரோகம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.














