ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து குவாஹாட்டி ரயில் நிலையத்தில் அப்பெண்ணுக்கு ரயில்வே மருத்துவர்கள், ஆர்பிஎப் பெண் காவலர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே செய்தித் தொடர்பாளர் கபின்ஜல் கிஷோர் சர்மா நேற்று கூறியதாவது: திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து ராணி கமலாபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பணி பெண் ஒருவர் திங்கட்கிழமை பயணம் செய்தார். பிஹார் மாநிலத்தின் பிரவ்னிக்கு சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இந்த தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குவாஹாட்டி ரயில் நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த ரயில் குவாஹாட்டி ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடைக்கு வந்ததும் ரயிலில் இருந்து இறங்குமாறு அப்பெண்ணையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து தயார் நிலையில் இருந்த ரயில்வே மருத்துவர்கள் அதே நடைமேடையில் அப்பெண்ணுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்தனர். இதில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பெண் காவலர்கள் உதவினர்.
இதையடுத்து அப்பெண்ணும் குழந்தையும் கணவருடன் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.














