டங்ஸ்டன் விவகாரத்தில் இன்று மகிழ்ச்சியான செய்தி வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மத்திய சுரங்கத்துறை அமைச்சரை சந்திக்கும் வகையில் அரிட்டாபட்டி விவசாயிகளை பாஜக தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டங்ஸ்டன் விவகாரத்தில் புதன்கிழமை (இன்று) மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகும். தொடக்கத்தில் இருந்தே இதற்கு தீர்வு வழங்கவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோமியம் குறித்து வகுப்பறையில் ஐஐடி இயக்குநர் பேசாததால், அதுகுறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டாம். அதை முடித்துக் கொள்வோம். இது தொடர்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசையின் விளக்கத்துக்கும் நான் கருத்து கூற விரும்பவில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து. ஆர்கேநகர் காவல்நிலையம் முன் கூலித் தொழிலாளி தீக்குளித்த சம்பவத்தை பார்க்கும்போது சாமானிய மனிதர்களுக்கு அச்சம் ஏற்படும். அவரது புகாரை ஏற்க போலீஸார் மறுத்தனரா என்பன உள்ளிட்டவை தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, பாஜக மூத்த தலைவர்கள் அறிவுரையை கேட்பதற்காகவும் அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 23 அல்லது 26 தேதியில் அவர் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு பாஜகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு தலைவர்கள் அறிவிக்கப்படுவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.














