அசாம் மாநிலத்தின் அதிசய அரிசி: அடுப்பு இல்லாமல் 15 நிமிடத்தில் சோறு சமைக்கலாம்

0
287

அசாம் அரிசியை பயன்படுத்தி அடுப்பு இல்லாமல் வெறும் 15 நிமிடத்தில் இனி சோறாக்கி சாப்பிடலாம். தினந்தோறும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவோருக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான உணவு அரிசி. குறிப்பாக, தென்னிந்தியாவில் இதன் பயன்பாடு அதிகம். ஆனால், இதனை சமைத்து சாப்பிடுவதற்கு குக்கர், அடுப்பு, காஸ் மட்டுமின்றி அதற்கான நேரமும் அதிகம். இதனால் பலர் சோறாக்குவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் கொடுத்த வரமாக வந்துள்ளதுதான் அசாம் மாநிலத்தில் விளையும் அகோனிபோரா அரிசி. இதனை மாயாஜால அரிசி என்றும் அழைக்கின்றனர். இது, நமது சோறாக்கும் நடைமுறையை முற்றிலும் புதுவிதமாக மாற்றியுள்ளது. இதற்கு அடுப்பு, குக்கர் என எதுவும் தேவையில்லை.

சமைப்பது எப்படி? – அகோனிபோரா என்பது அரைவேக்காடு (பாராபாயில்டு) அரிசி வகையைச் சேர்ந்தது. எனவே, இதனை மீண்டும் முழுமையாக சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. குளிர்ந்த நீராக இருந்தால் இந்த அரிசியை 45 நிமிடங்கள் ஊற வைத்தால் சோறு ரெடி. அதேபோன்று வெந்நீரில் ஊற வைத்தால் 15-20 நிமிடங்களில் இலையை போட்டு சாப்பாட்டுக்கு ரெடியாகி விடலாம். அடுப்பு, விறகு, தீ, காஸ், மின்சாரம் என எதுவும் இதற்கு தேவைப்படாது.

இயந்திரமாக ஓடி வேலை செய்யும் தனி நபர், சிறிய சமையலறை வசதியை கொண்டவர்கள், நீண்டதூரம் பயணம் செய்பவர்களுக்கு அகோனிபோரா அரிசி மிகப் பொருத்தமானதாக இருக்கும். இது, மேற்கு அசாம் பகுதிகளில் அதிகம் விளைகிறது. போரா சால் எனும் ஒட்டும் அரிசி குடும்ப வகையைச் சேர்ந்தது. அதிக புரதச் சத்துகள் நிறைந்தது. 4-5 மாதங்களில் விளையக்கூடியது.

குட்டையாக வளரும் அகோனிபோரா அரிசி வகையால் வைக்கோல் உற்பத்தி குறைவாக இருக்கும். அத்துடன் அறுவடை மற்றும் பதப்படுத்துவதற்கும் இந்த அரிசி மிக எளிமையானது.

அசாமின் டிடாபோர் அரிசி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளால் அகோனிபோரா அரிசி கடந்த 1992-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here