குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர். விமானப்படையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது வக்கீலாக பணியாற்றி வந்தார். சொந்தமாக விவசாயமும் செய்து வந்தார்.
கடந்த 15ஆம் தேதி தோட்டத்திற்கு சென்ற ராமச்சந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் ராமச்சந்திரன் கால் தவறி கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குலசேகரம் தீயணைப்பு படையை சேர்ந்த வீரர்கள் 2 நாட்களாக மங்கலம், புத்தன்சந்தை அணை ஆகிய பகுதிகளில் தீவிரமாக அவரை தேடினார்கள்.
இந்த நிலையில் நேற்று 19ஆம் தேதி பழையாற்றில் மீன்பிடிப்பதற்கு சென்ற சிறுவர்கள் அந்த பகுதியில் சடலம் வந்து புதருக்கு இடையில் ஒதுங்கி கிடப்பதை கண்டு ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே குலசேகரம் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டனர். இது 4 நாட்களுக்கு முன் காணாமல் போன ராமச்சந்திரன் உடல் என உறவினர்கள் அடையாளம் காட்டினர். இதையடுத்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை போலீசார் அனுப்பினார்.














