கருத்து வேற்றுமைகள் மக்களுக்கு பலன் தராது: ஆளுநரும், முதல்​வரும் பேசி முடி​வெடுக்க வேண்​டும் – தமிழிசை

0
223

கருத்து வேற்றுமைகள் மக்களுக்கு பலன் தராது. எனவே, ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசி மாநில பிரச்சினைகளுக்காக முடிவெடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரோடு பொங்கல் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பொங்கல் பரிசோடு சாமானிய மக்களுக்கு பொங்கல் விழா ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்துடன் ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஆட்சியில், பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இப்போது ஒரு ரூபாய் கூட கொடுக்க முன்வராதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணித்திருக்கிறது. அந்தவகையில், திமுகவை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்கிறது.

ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. இதுபோன்ற கருத்து வேற்றுமைகள் மாநில மக்களுக்கு பலன் தராது என்பதால், இருவரும், தங்களது வேற்றுமைகளை மறந்து அமர்ந்து பேசி மாநில பிரச்சினைகளை பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

தெலங்கானாவில், சந்திர சேகரராவ் முதல்வராக இருந்த போது, பிரதமர் வந்தால் வரவேற்க வரமாட்டார். முதல்வர் ஸ்டாலினை போல, மத்திய அரசின் திட்டங்களையும் சந்திர சேகரராவ் எதிர்த்து வந்தார்.

அதனால் தான், இன்று அவர் வீட்டில் இருக்கிறார். பல்வேறு ஆலோசனை, ஆய்வுக்கு பிறகு தான் மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது. எனவே, மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறுப்பது நல்லதல்ல. துணை வேந்தரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஒரு வரைவை கொடுத்திருக்கிறார்.

இந்த வரைவு வருவதற்கு முன்பே, அதை சட்டமாக்கிவிட்டதை போல தமிழக அரசு நாடகமாடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக டெபாசிட் வாங்காது என அமைச்சர்கள் கூறுவதை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. தேர்தலில் பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை.

திமுகவில் நேர்மையான போர் வீரர்களே இல்லை. திமுகவினர் முதுகில் குத்துபவர்கள். பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பாஜக தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது சீமானும் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here