ரிஷப் பந்த் தனது திறனை முழுமையாக உணரவில்லை: சொல்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்

0
297

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸிலும் அவர், 40 ரன்கள் சேர்த்திருந்தார். இருப்பினும் முதல் 4 டெஸ்ட் போட்டியிலும் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை எனவும், தனது விக்கெட்டை அவர், எளிதாக பறிகொடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடிப் சானலில் கூறியிருப்பதாவது: ரிஷப் பந்த் எந்த மாதிரியான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவருக்கு முறைப்படி தெளிவுப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலிய தொடரில் அவர், அதிக அளவிலான ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால் ரன்கள் எடுக்காத ஒருவரைப் போல அவர், விளையாடவில்லை. ரிஷப் பந்த் தனது முழு திறனை இன்னும் உணரவில்லை. அவர் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் உள்ளிட்ட அனைத்துவிதமான ஷாட்களையும் விளையாடக்கூடியவர். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்த ஷாட்கள் எல்லாம் அதிக ரிஸ்க் ஆனது.

ரிஷப் பந்த் 200 பந்துகளை எதிர்கொண்டால் நிச்சயம் அனைத்து ஆட்டங்களிலும் ரன்கள் குவிப்பார். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர், அதிரடியாக விளையாடுவதற்கும் தற்காப்பு ஆட்டம் மேற்கொள்வதற்கும் இடையிலான ஆட்டத்தை கண்டறிய வேண்டும். எந்த இடத்தில் அதிரடியாக விளையாட வேண்டும், எந்த இடத்தில் நிதானம் காட்ட வேண்டும் என்பதை உணர்ந்து இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து விளையாடினால் ரிஷப் பந்த் ஒவ்வொரு ஆட்டத்தில் 100 ரன்கள் எடுக்க முடியும். அந்த ஆட்டத்தை அவர், கண்டறிய வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் போராட வேண்டும் என்பதை கேட்டுதான் நான் வளர்ந்தேன். சிட்னி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் இருவிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் அவர், உடல் முழுவதும் பந்துகளால் அடி வாங்கிய நிலையில் 40 ரன்கள் சேர்த்தார். ஆனால் இதுகுறித்து குறைவாகவே பேசப்பட்டது. இது மிகவும் நியாயமற்றது.

அதேபோட்டியின் 2-வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அதற்காக அவரை வெகுவாக பாராட்டினார்கள். அனைவரும் அவர், முதல் இன்னிங்ஸில் போராடி சேர்த்த ரன்களை மறந்துவிட்டார்கள். 2-வது இன்னிங்ஸில் விளையாடிய விதத்தை பாராட்டினார்கள். ரிஷப் பந்த் அரிதாகவே தற்காப்பு ஆட்டத்தில் அவுட் ஆகிறார் என்பதை நாம் உணர வேண்டும். உலக கிரிக்கெட்டில் சிறந்த டிஃபன்ஸை அவர் பெற்றுள்ளார். தற்காப்பு ஒரு சவாலான அம்சமாக மாறியுள்ளது, அவர் மென்மையான கைகளுடன் சிறந்த வகையில் தற்காப்பு ஆட்டத்தை மேற்கொள்கிறார்.

நான் அவருக்கு வலைப்பயிற்சியில் நிறைய பந்து வீசியுள்ளேன், அவர் அவுட் ஆனது இல்லை. எட்ஜ் கூட கிடைக்காது. எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழப்பதும் கிடையாது. அவரிடம் சிறந்த டிபன்ஸ் உள்ளது. அதை அவரிடம் சொல்ல முயற்சித்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட் என்பதே சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதுதான். கடந்த 7 வருடங்களில் பேட்டிங் கடினமாக மாறி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பேட்டிங் சராசரி குறைந்துள்ளது. இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here