‘ஆன்லைன் விவாதங்களை கண்டு கொள்வது இல்லை’ – மெலோடி மீம்ஸ் கேள்விக்கு மோடி பதில்

0
309

நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், செல்ஃபி இணையத்தில் எப்போதுமே வைரலாகும். இந்நிலையில், பாட்காஸ்டில் பேசிய பிரதமர் மோடி இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த வகையில் பிரதமரிடம் காமத், “நாம் நிறைய நாடுகளைப் பற்றி பேசி வருகிறோம். இப்போது அதிலிருந்து சற்றே விலகி எனது விருப்ப உணவான பீட்சாவை நினைவுகூர்கிறேன். அதன் பிறப்பிடம் இத்தாலி. உங்களுக்கு இத்தாலி பற்றி நிறைய தெரியும் என மக்கள் கூறுகின்றனர். நீங்கள் இத்தாலி பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? உங்களை தொடர்புபடுத்தும் மீம்களை நீங்கள் பார்த்துள்ளீர்களா?” என்று வினவினார்.

அதற்கு பிரதமர் மோடி, “நான் மீம்கள், ஆன்லைன் விவாதங்களில் கவனம் செலுத்துவதில்லை. இவையெல்லாம் எப்போதும் இருப்பவை தான்.” என்றார்.

உணவு தொடர்பான கேள்விக்கு, ”நான் உணவுக் காதலன் அல்ல. நான் செல்லும் நாட்டில் என்ன உணவு பறிமாறப்படுகிறதோ அதை நான் உண்பேன். என்னிடம் உணவு மெனுவை யாரேனும் கொடுத்தால் என்னால் அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க முடியாது. மெனுவில் இருக்கும் உணவைத் தான் என் தட்டில் வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியாது. உணவைத் தேடித்தேடி உண்ணும் பழக்கம் இல்லாததால் எனக்கு அதைப் பற்றித் தெரியாது.

நான் ஆர்எஸ்எஸ்-ஸில் இருந்தபோது நானும் அருண் ஜேட்லியும் உணவகங்களுக்குச் சென்றால் நான் அவரைத் தான் எனக்கும் சேர்த்து உணவு ஆர்டர் செய்யச் சொல்வேன். நான் உண்ணும் உணவு சைவ உணவாக இருக்க வேண்டும். அது மட்டுமே எனது தெரிவாக இருக்கும்.” என்றார்.

இந்த பாட்காஸ்டுக்கான டிரைலரை நிகில் காமத் தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கும் நிலையில் 2 நிமிடம் 13 வினாடிகள் கொண்ட டிரைலர் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here