சட்டப்பேரவையில் இருந்து நேற்று 2 முறை அதிமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பெள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேசினார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவி்த்தனர். முதல்வர் பேச்சின் போது குறுக்கிட்டு பேச முயன்ற அதிமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அமளியில் ஈடுபட்டனர். அதன்பின், அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசும்போது, “பேரவைக்கு ஆளுநர் வரும்போது பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்துவிட்டனர். அதன்பிறகுதான் எங்கள் உறுப்பினர்கள் வந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களைப் பற்றி பேசாமல் மக்கள் பிரச்சினை குறித்து அவையில் பேச வந்த எங்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள்” என்றார்.
அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, “உங்கள் மீதான பேரவை விதிமீறல் நடவடிக்கை கூட வாபஸ் பெறப்பட்டுவிட்டது. அந்த விஷயம் அப்போதே முடிந்துவிட்டது. மறுபடியும் அதுகுறித்து பேசுவது நியாயமல்ல என்றார். அதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் இரண்டாவது முறையாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.














