யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி வரும் ஜனவரி 14 முதல் 19-ம் தேதி வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில் நடைபெறுகிறது. பிடபிள்யூஎஃப் உலக டூர் 750 சூப்பர் தொடரான இதில் இந்தியாவின் சவாலை பி.வி. சிந்து, லக்சயா சென் ஆகியோர் தோளில் சுமக்க உள்ளனர். ஒலிம்பிக் சாம்பியன்களான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், தென் கொரியாவின் அன் சே யங், உலகின் முதல் நிலை வீரரான ஷி யூகி உள்ளிட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்கின்றனர்.
இந்த சூப்பர் 750 தொடரை இந்திய பாட்மிண்டன் சங்கம் நடத்துகிறது. 2023-ம் ஆண்டில் சூப்பர் 750 ஆக தரம் உயர்த்தப்பட்ட இந்த போட்டி பிடபிள்யூஎஃப் உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்த தொடரின் பரிசுத்தொகை 950,000 அமெரிக்க டாலர் ஆகும். சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 11,000 புள்ளிகள் வழங்கப்படும். தொடரை நடத்தும் இந்தியாவில் இருந்து 21 பேர் களமிறங்குகின்றனர். அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் 3 பேர், மகளிர் ஒற்றையர் பிரிவில் 4 பேர், ஆடவர் இரட்டையரில் 2 ஜோடி, மகளிர் இரட்டையரில் 8 ஜோடி, கலப்பு இரட்டையரில் 4 ஜோடி என 21 பேர் இந்தியாவிலிருந்து விளையாட உள்ளனர்.
கடந்த இரண்டு சூப்பர் 750 சீசன்களில் இந்தியாவில் இருந்து 14 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இரு சீசனிலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஷிராக் ஷெட்டி, சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. மேலும் ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற எச்.எஸ்.பிரணாய் 2024-ல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.
ஷிராக்-சாட்விக் மற்றும் பிரணாய் தவிர, 2022-ம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் சாம்பியனான லக்சயா சென் மற்றும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக மகளிர் ஒற்றையர் சாம்பியனுமான பி.வி.சிந்து ஆகியோரும் பட்டம் வெல்வதற்கு மல்லுக்கட்ட உள்ளனர்.
இந்தத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலக பாட்மிண்டன் தரவரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள வீரர்களில் இரண்டு வீரர்கள் மட்டுமே இடம் பெறவில்லை. மேலும் பெண்கள் ஒற்றையர் டிராவில் தரவரிசையில் முதல் 20 வீராங்கனைகளில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவின் லியாங் வெய்கெங் மற்றும் வாங் சாங் ஆகியோருடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஆகியோரும், டென்மார்க் ஜோடியான கிம் ஆஸ்ட்ரப் மற்றும் ஆண்டர்ஸ் ராஸ்முசென் மற்றும் இந்தோனேசியாவின் ஃபஜார் அல்பியன், முகமது ரியான் அர்டியாண்டோ ஜோடியும் களமிறங்குகின்றன.
இந்திய வீரர்களின் பட்டியல்:
ஆண்கள் ஒற்றையர்: லக்சயா சென், ஹெச்.எஸ். பிரணாய், பிரியான்ஷு ரஜாவத்.
பெண்கள் ஒற்றையர்: பி.வி.சிந்து, மாளவிகா பன்சோட், அனுபமா உபாத்யாயா, ஆகர்ஷி காஷ்யப்.
ஆண்கள் இரட்டையர்: ஷிராக் ஷெட்டி / சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, கே சாய் பிரதிக் / ப்ருத்வி கே.ராய்.
பெண்கள் இரட்டையர்: ட்ரீசா ஜாலி / காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா / தனிஷா கிராஸ்டோ, ருதுபர்ணா பாண்டா / ஸ்வேதபர்ணா பாண்டா, மன்சா ராவத் / காயத்ரி ராவத், அஸ்வினி பட் / ஷிகா கவுதம், சாக்சி கஹ்லாவத் / அபூர்வா கஹ்லாவத், சானியா சிக்கந்தர் / ரஷ்மி கணேஷ், மிருண்மயி தேஷ்பாண்டே / பிரேரானா அல்வேகர்
கலப்பு இரட்டையர்: துருவ் கபிலா / தனிஷா கிரஸ்டோ, கே.சதீஷ் குமார் / ஆத்யா வரியாத், ரோஹன் கபூர் / ஜி.ருத்விகா ஷிவானி, ஆஷித் சூர்யா / அம்ருதா பிரமுதேஷ்.














