கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜு, ஹர்தோய் மாவட்ட போலீஸில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளர். அதில் தன்னையும், தனது 6 குழந்தைகளையும் தவிக்க விட்டு தனது மனைவி ராஜேஸ்வரி, அதே பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் என்பவருடன் ஓடி விட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜேஸ்வரியை கண்டுபிடித்துள்ளனர். அவர் ஓடிப் போன 3 தினங்களுக்குள் அவரை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜு கூறும்போது, “கடந்த 3-ம் தேதி, எனது மனைவி ராஜேஸ்வரி, கடைக்குச் சென்று துணி, காய்கறி வாங்கி வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் திரும்பவரவில்லை. அவர், இப்பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டுடன் ஓடியிருக்கவேண்டும். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வருவதை நானே பார்த்திருக்கிறேன். அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும்” என்றார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஷில்பா குமாரி கூறும்போது, “நாங்கள் ராஜேஸ்வரியை கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத் தேடி வருகிறோம்” என்றார். கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ராஜேஸ்வரி ஓடிப் போன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.














