பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரின் சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் முடக்கியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவைச் சேர்ந்தவர் முபாஷிர் அகமது. இவர் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர். இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் நேற்று முடக்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “முபாஷிர் அகமதுவின் அசையா சொத்து டிரால் மண்டலத்திலுள்ள சையதாபாதில் உள்ளது. இதை போலீஸார் முடக்கியுள்ளனர். அவந்திபோரா போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முபாஷிர் அகமது, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். மேலும், இவர் காஷ்மீரில் தீவிரவாத செயல்களை நடத்தியும், ஊக்குவித்தும் வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.














